தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அதிகாரிகளை நியமிப்பதற்கான ஆணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளுக்கு அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளில் இடஒதுக்கீடு சரியான முறையில் நிர்ணயம் செய்யப்படாமல் அவசரகோலத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு இருப்பதாக கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித் உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்ததுடன், புதிய அறிவிப்பு வெளியிட்டு டிசம்பர் 31-க்குள் தேர்தலை நடத்தி முடிக்கும்படி மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டது. உள்ளாட்சி அமைப்புகளின் பதவிக்காலம் வருகிற 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. எனவே அதற்குள் தேர்தலை நடத்தி முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய பிரதிநிதிகள் பதவி ஏற்கும் வரை உள்ளாட்சி அமைப்புகளில் தனி அதிகாரிகள் நியமனம் செய்யப்பட வேண்டும். அதன்படி தமிழகத்தின் 12 மாநகராட்சிகள், 148 நகராட்சிகள், 561 நகர பஞ்சாயத்துகள், 385 ஊராட்சி ஒன்றியங்கள், 32 மாவட்ட ஊராட்சிகள், மற்றும் 12 ஆயித்து 620 கிராம ஊராட்சிகள் ஆகியவற்றுக்கு தனி அதிகாரிகள் நியமிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நியமிக்கப்படும் தனி அதிகாரிகள் டிசம்பர் மாதம் வரை, அதாவது புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளின் முதல் கூட்டம் நடைபெறும் வரை அந்தப் பொறுப்பில் நீடிப்பார்கள் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment