FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

3 November 2015

டெங்கு' காய்ச்சலால் இறப்புகள் தொடரும் நிலையில், சித்தா மருத்துவர்களுடன் ஆலோசித்த தமிழக அரசு, ரத்த தட்டணுக்களை அதிகரிக்கச் செய்யும், 'ஆடாதொடை மணப்பாகு' என்ற, கசப்பில்லா கஷாயத்தை, அரசு மருத்துவமனைகளில் வழங்க முடிவு செய்துள்ளது;

'டெங்கு' காய்ச்சலால் இறப்புகள் தொடரும் நிலையில், சித்தா மருத்துவர்களுடன் ஆலோசித்த தமிழக அரசு, ரத்த தட்டணுக்களை அதிகரிக்கச் செய்யும், 'ஆடாதொடை மணப்பாகு' என்ற, கசப்பில்லா கஷாயத்தை, அரசு மருத்துவமனைகளில் வழங்க முடிவு செய்துள்ளது; ஓரிரு நாளில், புதிய கஷாயத்தின் வினியோகம் துவங்கும்.தமிழகத்தில், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் முதல், ஜன., 15 வரை, டெங்கு காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. நன்னீரில் உருவாகும், 'ஏடிஸ்' வகை கொசுக்களே இதற்கு காரணம். 2012ல் டெங்கு பாதிப்பால், 66 பேர் இறந்தனர்.

அலோபதி மருத்துவர்களே தகுந்த சிகிச்சை தர திணறிய நிலையில், சுதாரித்த தமிழக அரசு, சித்த மருத்துவர்கள் ஆலோசனைப்படி, நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு கொடுத்து
நிலைமையை கட்டுப்படுத்தியது. இந்த ஆண்டும், டெங்கு பாதிப்பு மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது.
தமிழக அரசின் பல துறைகளும் ஒருங்கிணைந்து, தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தாலும், இரு மாதமாக இறப்புகள் தொடர்கின்றன. கடந்த, இரு மாதங்களில், 20 பேர் உட்பட, இந்த ஆண்டில், 30 பேர், டெங்கு பாதிப்பு மற்றும் அறிகுறியால் இறந்துள்ளனர். ஆனால், எட்டு பேர் மட்டுமே இறந்துள்ளதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது.
'ரத்த தட்டணுக்கள் வேகமாக குறைவதால், இறப்புக்களை கட்டுப்படுத்த முடியவில்லை' என, மருத்துவர்கள் தரப்பில் காரணம் கூறப்படுகிறது. இதை உணர்ந்த தமிழக அரசு, மீண்டும் சித்த மருத்துவர்களின் உதவியை நாடியுள்ளது.
தமிழ்நாடு அரசு சித்த மருத்துவர் சங்க தலைவர் பிச்சையா குமார், சித்தா மருத்துவர்கள் சங்கர்ராஜ், சைலஷா, ஆராய்ச்சி மாணவர் வீரபாபு குழுவினருடன், சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், நேற்று ஆலோசனை நடத்தினார். ரத்த தட்டணுக்கள் குறைவை தடுக்க, 'ஆடாதொடை மணப்பாகு' என்ற கஷாயத்தை, இக்குழுவினர் பரிந்துரைத்து உள்ளனர்.
இதை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, ஆடாதொடை மணப்பாகு கஷாயத்தை, பொதுமக்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறுடன், ஆடாதொடை மணப்பாகு கஷாயமும், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும். இது ஏற்கனவே, 'டாம்ப்கால்' நிறுவனத்தின் தயாரிப்பில் உள்ளதால் சிக்கல் இல்லை. இந்த கஷாய வினியோகம், ஓரிரு நாளில் துவங்கும்' என்றனர்.
தமிழக அரசின் இந்த முயற்சிக்கு, நல்ல பலன் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பாக்ஸ் செய்தி

அது என்ன மணப்பாகு?

சித்தா ஆராய்ச்சி மாணவர் வீரபாபு கூறியதாவது:
ஆடாதொடை இலை, 700 கிராம் எடுத்து, நடுவில் உள்ள நரம்பு மற்றும் காம்பை அகற்ற வேண்டும். அவற்றை, 5.5 லிட்டர் தண்ணீரில் காய்ச்ச வேண்டும். 1.3 லி., அளவுக்கு வற்றியதும், 805 கிராம் நாட்டுச் சர்க்கரையை சேர்த்து கொதிக்க வைத்து, கம்பி பதம் வந்ததும் இறக்கலாம்; இது தான், ஆடாதொடை மணப்பாகு. பழங்கால ஓலைச்சுவடிகளில், இந்த அளவு தான் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
இது, ரத்த தட்டணுக்கள் குறையாமல் தடுக்கும்; தட்டணுக்கள் அதிகரிக்கவும் வழி வகுக்கும். ஐந்து வயதுக்கு கீழானோர் - 2.5 மில்லி; 10 வயது வரை உள்ளோர் - 5 முதல் 10 மில்லி; பெரியவர்கள் - 10 முதல் 20 மில்லி வரை அருந்தலாம். தினமும் உணவுக்கு முன், காலை, மாலை என இரண்டு வேளை குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.


அலட்சியம் வேண்டாம்!
பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
* டெங்கு பாதிப்புக்கு, பகல் நேரத்தில் கடிக்கும், 'ஏடிஸ்' கொசுவே காரணம். இது, நன்னீரில் உற்பத்தியாவதால், வீட்டின் உள் பகுதி, சுற்றுப்புற பகுதிகளில், நாள் கணக்கில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்
* தண்ணீர் தேங்க வாய்ப்புள்ள பிளாஸ்டிக் கப், குடம், தேங்காய் மட்டை, டயர்களை அகற்ற வேண்டும். தண்ணீர் தொட்டிகள், தண்ணீர் பாத்திரங்களை, வாரம் ஒருமுறை சுத்தம் செய்ய வேண்டும்
* சாதாரண காய்ச்சல் என, அலட்சியம் வேண்டாம். உடனடியாக, மருத்துவர்களிடம் செல்வது நல்லது. மருந்து கடைகளில், தானாக மருந்து வாங்கி சாப்பிடுவது தேவையற்ற சிக்கலை ஏற்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த, நிலவேம்பு கஷாயம் நல்ல தீர்வு.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment