FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

27 July 2019

பள்ளி வாகனங்களில் ஜி.பி.எஸ். மற்றும் சி.சி.டி.வி. கேமரா

சென்னை, பள்ளி வாகனங்கள் அனைத்திலும் ஜி.பி.எஸ். மற்றும் கண்காணிப்பு கேமராக்களை ஒரு மாதத்துக்குள் பொருத்தும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையைச் சேர்ந்த கோபிகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்த மனு:கோவையில் பள்ளி வாகனத்தில் சென்ற மாணவியை ஓட்டுனர் மற்றும் உதவியாளர் சேர்ந்து பாலியல் தொந்தரவு செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்களை தடுக்க பள்ளி வாகனங்களில் செல்லுமிடம் அறிய உதவும் ஜி.பி.எஸ். கருவிகள் மற்றும் கண்காணிப்பு கேமராக்களை பொருத்த பள்ளிகளுக்கு உத்தரவிட வேண்டும்.அந்த வாகனங்களை பள்ளி நிர்வாகமும் பெற்றோரும் இணையதளம் வழியாக கண்காணிக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசுக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டது.மனு நீதிபதிகள் மணிகுமார் சுப்ரமணிய பிரசாத் அடங்கிய 'டிவிஷன் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளி கல்வி இயக்குனரகம் அனுப்பிய கடிதத்தின் நகல் வழங்கப்பட்டது.அதில் கூறியிருப்பதாவது: பள்ளி வாகனங்களில் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஒவ்வொரு வாகனத்திலும் அது சொந்தமானதாக இருந்தாலும் வாடகைக்கு எடுக்கப்பட்டதாக இருந்தாலும் கண்டிப்பாக ஜி.பி.எஸ். கருவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும்.எல்லா நேரங்களிலும் அவை இயங்கும் நிலையில் இருக்கும்படி பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும். வாகனங்களின் போக்குவரத்தை பள்ளி வளாகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து நிர்வாகம் கண்காணிக்க வேண்டும்.அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் இது குறித்து தேவையான உத்தரவுகள் வழங்கப்படும். நடவடிக்கை எடுத்ததற்கான அறிக்கையை உடனடியாக பள்ளி கல்வி இயக்குனரகத்துக்கு அனுப்ப வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.இதையடுத்து பள்ளி கல்வி இயக்குனரகம் அனுப்பிய உத்தரவை ஒரு மாதத்துக்குள் அமல்படுத்தும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

No comments:

Post a Comment