FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

11 May 2019

டெட் தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு இரண்டு வாரம் சிறப்புப் பயிற்சி: பள்ளிக் கல்வித்துறை

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு இரண்டு வாரங்கள் சிறப்புப் பயிற்சி அளிக்கப்படவுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம், 2010 ஆகஸ்ட் 23-ஆம் தேதி அமல்படுத்தப்பட்டது. அதன்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியில் சேர ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். ஏற்கெனவே ஆசிரியராகப் பணியாற்று பவர்கள் அடுத்த 5 ஆண்டுகளில் டெட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்தச் சட்டம் தமிழகத்தில் 2011-இல் தான் நடைமுறைக்கு வந்ததால், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற ஆசிரியர்களுக்கு 2016-ஆம் ஆண்டு வரை அவகாசம் அளிக்கப்பட்டது. பின்னர் அந்த அவகாசம் 2019 மார்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அந்த அவகாசமும் முடிந்துவிட்ட சூழலில், தனியார் மற்றும் அரசு உதவி பள்ளிகளில் இன்னும் 28 ஆயிரம் ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறாமல் உள்ளனர். இதில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களின் சம்பளத்தை அரசு நிறுத்தி வைத்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு விசாரணையில், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு மார்ச் மாதத்துடன் கெடு முடிந்துவிட்டது. தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை பணிநீக்கம் செய்வது குறித்து தமிழக அரசு உரிய முடிவு எடுக்கலாம் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த நிலையில் டெட் தேர்ச்சி பெறாத 1500 ஆசிரியர்களுக்கு இரண்டு வாரம் சிறப்பு பயிற்சி அளிக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் உஷாராணி அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களால் தொடரப்பட்ட வழக்கில் அந்தத் தேர்வில் தேர்ச்சி பெற ஏதுவாக மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சிஅளிக்க வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்குநர் கேட்டுக் கொண்டுள்ளார்.

டெட் தேர்ச்சியின்றி நியமனம் செய்யப்பட்ட 1,500 ஆசிரியர்களில் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ள ஆசிரியர்கள் தங்கள் பெயர்களை அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

அவ்வாறு பதிவு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் பயிற்சி நடைபெறும் இடம், தேதி குறித்த தகவல்களை, மாவட்ட ஆசிரியர்கள் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் முதல்வர்களுக்கு தெரிவிப்பார்கள்.

எனவே ஏற்கெனவே ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு கருத்தாளர்களாக செயல்பட்ட முதுநிலை விரிவுரையாளர்கள் மற்றும் விரிவுரையாளர்களைக் கொண்டு இந்த ஆசிரியர்களுக்கு திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை இரு வாரங்களுக்கு (10 நாள்கள்) பயிற்சி அளிக்க மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களின் முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என அதில் கூறியுள்ளார்.

*ஆசிரியர் தகுதித் தேர்வான டெட் தேர்வில் தேர்ச்சி பெறாத 1,500 ஆசிரியர்களுக்கு 2 வாரங்கள் சிறப்பு பயிற்சி அளிக்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 
*டெட் தேர்ச்சியின்றி நியமனம் செய்யப்பட்ட 1,500 ஆசிரியர்களில் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் தங்கள் பெயர்களை அந்தந்த முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் பதிவு செய்து கொள்ளலாம். 
*பதிவு செய்த ஆசிரியர்களுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் பயிற்சி நடைபெறும் இடம், தேதி குறித்த தகவல்களை தெரிவிப்பார்கள். 
*இந்த சிறப்பு பயிற்சி திங்கள் - வெள்ளி வரை 2 வாரங்களுக்கு (10 நாட்கள்) நடைபெறும்.

No comments:

Post a Comment