அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பான, 'ஜாக்டோ ஜியோ' நாளை முதல், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை நடத்துகிறது. இதனால், அரசு பணிகள், பொதுத் தேர்வு உள்ளிட்ட பணிகள் முடங்கும் அபாயம் உள்ளது.'பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்' என்பன உள்ளிட்ட, பல கோரிக்கைகளை, ஜாக்டோ ஜியோ முன் வைத்துள்ளது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏழு ஆண்டுகளுக்கு மேலாக, பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.இந்நிலையில், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை தொடர்வதா என்பது குறித்து, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, சாந்தஷீலா நாயர் தலைமையில், 2016ல் நிபுணர் கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டி, காலாவதியானதால், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி, ஸ்ரீதர் தலைமையில், புதிய கமிட்டி அமைத்து, ஆய்வு செய்யப்பட்டது.இந்த கமிட்டியின் அறிக்கை, 2018, நவ., 27ல் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதேபோல, ஊதிய முரண்பாடுகளை களைவதற்கான, சித்திக் கமிட்டியின் அறிக்கை, இந்த ஆண்டு, ஜன., 5ல் அரசிடம் தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இந்த அறிக்கைகள் வந்த பின்பும், அரசு தரப்பில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.இதையடுத்து, நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை, ஜாக்டோ ஜியோ துவக்க உள்ளது. எனவே, இந்த அமைப்பு, 'போராட்டம் நடத்த மாட்டோம்' என, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அளித்திருந்த வாக்குறுதியை திரும்ப பெற்றுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, உயர்கல்வி துறை, நகர் நிர்வாக துறை, தலைமை செயலகம் உள்ளிட்ட பல்வேறு துறை ஊழியர்கள், போராட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்த போராட்டத்தில், ஐந்து லட்சம் ஆசிரியர்கள் உட்பட, 12 லட்சம் அரசு ஊழியர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளது.பள்ளிகளில், பிப்., 1ல் செய்முறை தேர்வும், மார்ச், 1 முதல் பொதுத்தேர்வும் துவங்கும் நிலையில், ஆசிரியர்கள் போராட்டத்தில் பங்கேற்பதால், தேர்வு பணிகள் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. அதேபோல, அரசு பணிகளும், அரசு துறை அலுவலக பணிகளும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.'போராட்டம் வேண்டாம்'பள்ளி கல்வி அமைச்சர், செங்கோட்டையன் நேற்று கூறியதாவது:'ஜாக்டோ ஜியோ போராட்டத்தில், ஆசிரியர்கள் பங்கேற்க வேண்டாம்' என, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் துவங்க உள்ளன. மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி முடிக்க வேண்டியுள்ளது. எனவே, எங்கள் கோரிக்கையை, ஆசிரியர்கள் ஏற்பர் என்ற நம்பிக்கை உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்
No comments:
Post a Comment