FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

28 July 2018

தமிழ்வழியில் படிக்கும் எஸ்.எஸ்.எல்.சி, பிளஸ்-2 மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை - அமைச்சர்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே கூகலூரில் உள்ள அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ‘ஸ்மார்ட்’ வகுப்பு தொடக்க விழா நடந்தது. விழாவில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு ‘ஸ்மார்ட்’ வகுப்பை தொடங்கி வைத்தார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் சீருடைகள் மாற்றி அமைக்கப்படும். இதன் மூலம் தனியார் பள்ளிக்கும், அரசு பள்ளிக்கும் இடையே உள்ள வேறுபாடு அகலும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்விக்காக 50 சதவீதம் இடம் ஒதுக்கி அரசு ஆணை பிறப்பித்துள்ளது.


9, 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகள் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட உள்ளது. இதன் மூலம் மாணவ-மாணவிகள் உலக செய்திகளை தெரிந்து கொள்ளலாம். பட்டயக் கணக்காளர் படிப்பு படிக்க பிளஸ்-2 முடித்த 25 ஆயிரம் பேருக்கு இந்த ஆண்டு முதல் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.



மேலும், பிளஸ்-2 படித்தவுடன் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்ற உத்தரவாதத்துடன் இந்த அரசு பல்வேறு புதிய பாடத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த கல்வி ஆண்டில் அரசு பள்ளிக்கூடங்களில் 1 லட்சம் மாணவ-மாணவிகள் கூடுதலாக சேர்ந்து உள்ளனர். வரும் கல்வி ஆண்டில் 3 லட்சம் மாணவ, மாணவிகளை அரசு பள்ளியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


தமிழகத்தில் 4 ஆயிரத்து 622 நூலகங்கள் உள்ளன. இதில் கடந்த ஒரு மாதத்தில் 1 லட்சத்து 50 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக சேர்ந்து உள்ளனர். இலங்கையில் உள்ள நூலகத்துக்கு 1 லட்சம் சிறந்த நூல்கள் அரசின் சார்பில் விரைவில் வழங்கப்பட உள்ளது. தமிழ் வழி கல்வி படிக்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த அரசு ஊக்கத்தொகை வழங்க உள்ளது.


அதன்படி பள்ளியில் சிறந்த வருகை, ஒழுக்கம், நல்ல மதிப்பெண், சமூக சேவையில் ஆர்வம் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் 10-ம் வகுப்பு மாணவ- மாணவிகளுக்கு ரூ.10 ஆயிரமும், பிளஸ்-2 படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ரூ.20 ஆயிரமும் என மொத்தம் 960 பேருக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளது.


இதற்காக 5 பேர் கொண்ட குழு அமைக்கப்படும். அவர் கள் சிறந்த மாணவ, மாணவிகளைத் தேர்வு செய்வார்கள்.


இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment