FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

12 April 2018

ஒரே நேரத்தில் நாடாளுமன்றத்துக்கும், தமிழக சட்டசபைக்கும் தேர்தல்?அடுத்த ஆண்டு நடத்த சட்ட கமிஷன் சிபாரிசு

நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் தனித்தனியாக தேர்தல் நடத்துவதால் நாட்டுக்கு பெரும் நிதிச்சுமை ஏற்படுகிறது. இதேபோன்று தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்களை ஈடுபடுத்துவதால் வழக்கமான பணிகள் பாதிக்கின்றன.

இதன் காரணமாக நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்த நிலையில், நாடாளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு பொதுத்தேர்தல் நடக்க உள்ளது.

இந்த தேர்தலுடன் சேர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, அருணாசல பிரதேசம், அசாம், பீகார், சத்தீஷ்கார், அரியானா, மத்திய பிரதேசம், மராட்டியம், ராஜஸ்தான், சிக்கிம், தெலுங்கானா, மேற்கு வங்காளம், டெல்லி, காஷ்மீர், ஜார்கண்ட், ஒடிசா ஆகிய 19 மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தலாம் என சிபாரிசு செய்து மத்திய சட்ட கமிஷன் வரைவு அறிக்கை ஒன்றை தயார் செய்து கொண்டு இருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

எஞ்சிய கர்நாடகம், மிசோரம், நாகாலாந்து, மணிப்பூர், மேகாலயா, கோவா, குஜராத், இமாசல பிரதேசம், பஞ்சாப், திரிபுரா, உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் ஆகிய 12 மாநிலங்களுக்கு 2024-ம் ஆண்டு ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தல் நடத்தலாம் எனவும் பரிந்துரை செய்து அறிக்கை தயாரிக்கப்படுகிறது.

2024-ம் ஆண்டு தேர்தல் நடத்தலாம் என பரிந்துரைக்கப்படுகிற மாநிலங்களில் சிலவற்றின் ஆயுள்காலத்தை நீட்டிக்க வேண்டிய நிலை வரலாம். எனவே இது தொடர்பாக மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை திருத்த வேண்டிய தேவை எழும்.

இது சாத்தியம் இல்லை என்கிற பட்சத்தில், 19 மாநில சட்டசபை தேர்தல்கள் நடந்து முடிந்த 30 மாதங்களுக்கு பிறகு இந்த 12 மாநிலங்களுக்கு தேர்தல் நடத்தலாம் எனவும் பரிந்துரை செய்து அறிக்கை அளிக்கப்படுகிறது.

இதுபற்றி வரும் 17-ந் தேதி சட்ட கமிஷன் விவாதிக்க உள்ளது.

நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டசபைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டுமானால், அரசியல் சாசனத்தில் 5 திருத்தங்கள் செய்ய வேண்டியது வரும் என கடந்த பிப்ரவரி மாதம் மத்திய சட்ட அமைச்சகத்திடம் தேர்தல் கமிஷன் கூறி இருப்பது நினைவுகூரத்தக்கது.

No comments:

Post a Comment