FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

5 April 2017

திருமணமான பெண்களுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்க மறுப்பது சட்டவிரோதம்: உயர்நீதிமன்றம்

திருமணமான பெண்களுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க மறுப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது  சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் யசோதை. இவரது தந்தை அங்குள்ள கூட்டுறவு வங்கியில் வேலை செய்து வந்தார். அவர் 2008 ஆம் ஆண்டு இறந்தார். இதனால் கருணை அடிப்படையில் வேலைகேட்டு கூட்டுறவு சங்கத்தில் யசோதை விண்ணப்பித்தார். அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதைடுத்து தனக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் யசோதை வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மனுதாரர் கோரிக்கையை பரிசீலிக்க உத்தரவிட்டது. ஆனால் யசோதைக்கு திருமணம் ஆகிவிட்டது என்றும் 30 வயதைக் கடந்தவர் என்றும் கூறி, அவருடைய மனு மீண்டும் நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில் தனது மனுவை கூட்டுறவு வங்கி நிராகரித்ததை ரத்து செய்யக்கோரி, அவர் மீண்டும் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தார். அதை விசாரித்த நீதிமன்றம், வங்கி உத்தரவை ரத்து செய்து 2 வாரத்துக்குள் பணி வழங்க 2015 ஆம் ஆண்டு உத்தரவிட்டது.

இதை எதிர்த்து விருதுநகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளின் இணை பதிவாளர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு  செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, ஜே.நிஷாபானு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
 திருமணமான பெண்கள் கருணை அடிப்படையில் வேலை கேட்க தகுதியில்லாதவர்கள் என்று கூறுவதை ஏற்க முடியாது. இதுபோல திருமணத்தை காரணமாக வைத்து வேலை வழங்க மறுப்பது அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.

இந்த வழக்கை தனி நீதிபதி விசாரித்தபோது, வயது தொடர்பான காரணங்கள் முன்வைக்கப்படவில்லை. மேலும் வயது தொடர்பான விதிகளை கூட்டுறவு சங்கம் தங்களது வசதிக்காக மறைத்துள்ளது. ஆனால், உண்மையிலேயே கூட்டுறவு சங்க விதிகளில், 40 வயது வரை கருணை அடிப்படையில் வேலை கேட்கலாம் என்று கூறப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பு வழக்குரைஞர் தெரிவித்துள்ளார்.

தனி நீதிபதியின் உத்தரவில் தவறில்லை என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 4 வாரங்களுக்குள் மனுதாரருக்கு பணி நியமன ஆணை வழங்க வேண்டும். கூட்டுறவு சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர்.

No comments:

Post a Comment