FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

13 March 2017

உயர்நீதிமன்ற உத்தரவை அமுலாக்கக் கோரியும், பதவி உயர்வு பட்டியலில் ஆசிரியருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றுகோரியும் திண்டுக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக முற்றுகையிடப்பட்டது.

உயர்நீதிமன்ற உத்தரவை அமுலாக்கக் கோரியும், பதவி உயர்வு பட்டியலில் ஆசிரியருக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றுகோரியும் திண்டுக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தை தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக முற்றுகையிடப்பட்டது.

அது பற்றிய விவரம் வருமாறு. வேடசந்தூர் ஒன்றியம் கோவிலூரில் ஊராட்சி ஒன்றிய பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றுபவர் செந்தில்குமார். 2013ம் ஆண்டு பதவி உயர்வு மூப்பு பட்டியலின்படி இவருக்கு பதவி வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த ஒன்றியத்திற்குட்பட்ட தொட்டணம்பட்டியில் உள்ள பள்ளிக்கு சேலத்தில் இருந்து டி.நீலவேணி என்ற ஆசிரியைக்கு பணிமாறுதல் வழங்கப்பட்டது. இந்த பணியிட மாறுதலில் பல லட்ச ரூபாய் கைமாறியதாக கூறப்படுகிறது. மேலும் மாவட்ட அளவிலான பணி மாறுதல் வழங்கக்கூடாது என்ற அரசு ஆணை இருக்கும் போதே விதிமுறைகளுக்கு மாறாக மாவட்ட மாறுதல் அடிப்படையில் ஆசிரியை டி.நீலவேணி பணியமர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை எதிர்த்து பதவி உயர்வு பட்டியலில் முதலிடம் உள்ள செந்தில்குமார் 23.8.2013ம் ஆண்டு மதுரை உயர்நீதிமன்றத்தை அணுகினார். இதற்கிடையே அன்றைக்கு இருந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் பாண்டியராஜனுடன் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் நிர்வாகிகள் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். இந்நிலையில் கடந்த 15.12.2015 அன்று செந்தில்குமாருக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவை அமுலாக்க வேண்டும் என்றும் முந்தைய மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரிடம் சங்க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர். தற்போதைய மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலராக உள்ள மீனாவதியிடமும் பல கட்ட பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு உள்ளது. ஆனால் தீர்ப்பு அமுல்படுத்தப்படாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறதே ஒழிய ஒரு உறுதியான பதிலை மீனாவதி தரவில்லை. இந்நிலையில் ஆசிரியர் செந்தில்குமாருக்கு நியாயம் கேட்டு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பாக திங்களன்று மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டும் அதிகாரிகள் தரப்பில் கண்டு கொள்ளப்படவில்லை.

இதனையடுத்து திங்களன்று சங்கத்தின் மாநில தலைவர் ச.மோசஸ் தலைமையில் 50 பெண் ஆசிரியர் உட்பட 200க்கும் மேற்பட்டவர்கள் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதிகாரி மீனாவதி வராததால் முற்றுகை போராட்டம் காத்திருக்கும் போராட்டமாக மாறியது. இந்த போராட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் கணேசன், அமல்ராஜ், ராஜேந்திரன், ஜேம்ஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment