FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

3 November 2016

வலுப்பெற்றது காற்றழுத்தத் தாழ்வு பகுதி: தமிழகம், புதுச்சேரியில் கனமழைக்கு வாய்ப்பு.

வங்கக் கடலில் அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளதால் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம், புதுச்சேரியில் இடியுடன்கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வடக்கிழக்கு பருவமழை ஞாயிற்றுக்கிழமை (அக்.30) தொடங்கியது. 
இதைத் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் அவ்வப்போது பரவலாக மழை பெய்து வருகிறது. சென்னையில் நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், திருவல்லிக்கேணி உள்பட பல்வேறு இடங்களில் புதன்கிழமைமழை பெய்தது. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் ஒரு மணி நேரமாக கொட்டித்தீர்த்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.இந்த நிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர தமிழகம்மற்றும் புதுச்சேரியில் இடியுடன்கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியதாவது: அந்தமான் கடல் பகுதியில் திங்கள்கிழமை (அக்.31) உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி வலுப்பெற்றுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற்று வடமேற்கு திசையிலும், மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிக்கும் நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதனால் வட தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், தென் தமிழகத்தில் சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. குறிப்பாக தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்யும். சென்னையில் அவ்வப்போது மழை பெய்யும் என்றார் அவர்.கடந்த 24 மணி நேரத்தில் பொன்னேரியில் 8 செ.மீ., சாத்தான்குளம் 6 செ.மீ., காயல்பட்டனம் 5 செ.மீ, தாமரைப்பாக்கம், ஏற்காடு தலா 3 செ.மீ. மழை பெய்துள்ளது. சென்னையில் அவ்வப்போது லேசான மழை பெய்து வந்தது.

No comments:

Post a Comment