FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

15 August 2017

'நீட்' தேர்வுக்கு ஓராண்டு விலக்கு முக்கிய அறிவிப்பு நாளை வெளியாகலாம்

'நீட்' தேர்வுக்கு ஓராண்டு விலக்கு அளிக்க வகை செய்யும், தமிழக அரசின் சட்ட வரைவு மசோதாவை ஏற்ற, மத்திய உள்துறை அமைச்சகம், மற்ற அமைச்சகங்களுடன், ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதால், இது குறித்து முக்கிய அறிவிப்பு, நாளை வெளியாகலாம் என,எதிர்பார்க்கப்படுகிறது.



நீட், தேர்வு, விலக்கு, நாளை, அறிவிப்பு 


மருத்துவப் படிப்புகளுக்கு நடத்தப்படும், பொது நுழைவுத் தேர்வான, 'நீட்'டிலிருந்து விலக்கு அளிக்கும்படி, தமிழக அரசு, மத்திய அரசை, தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. இதைத் தொடர்ந்து, 'ஓராண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு தயார்' என, மத்திய அமைச்சர், நிர்மலா சீதாராமன், சமீபத்தில் தெரிவித்தார்.



ஆவணங்கள் தயார்




இதையடுத்து, தமிழக அரசின் சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் டில்லி விரைந்தார்.


நேற்று டில்லியில் உள்துறை அமைச்சகத்திற்கு சென்ற அவர், ஓராண்டுக்கு விலக்கு கோரும் சட்ட முன்வரைவை அளித்தார். காலையில், உள்துறை இணைச் செயலர் மித்ராவிடம் ஆலோசனை நடத்திய பின், தமிழ்நாடு இல்லம் திரும்பிய ராதாகிருஷ்ணன், கூடுதல் ஆவணங்களை தயார் செய்து, மீண்டும் உள்துறைஅமைச்சகத்திற்கு வந்தார்.

ஏற்கனவே, மத்திய அரசு வசம் இரண்டு சட்ட வரைவுகள் இருந்தன. நிரந்தர விலக்கு கோரும் சட்ட வரைவு மற்றும் இரண்டு ஆண்டுகளுக்கு விலக்கு கோரும் சட்ட வரைவு ஆகியவை, திரும்பப் பெறப்பட்டன. அவற்றில் கூடுதல் திருத்தங்கள் செய்யப்பட்டு, ஓராண்டுக்கு மட்டும் விலக்கு கோரும் புதிய சட்ட வரைவு, தெளிவாக தயார் செய்யப்பட்டு, உள்துறை இணைச் செயலர் வசம் ஒப்படைக்கப்பட்டது.



நல்ல முடிவு




இதன்பின், நிருபர்களிடம் பேசிய ராதாகிருஷ்ணன், ''மத்திய அரசிடம், ஓராண்டுக்கு மட்டும் விலக்கு கோரும் சட்ட வரைவு ஆவணங்கள் அளிக்கப்பட்டுள்ளன; நல்ல முடிவு வரும் என, நம்புகிறோம்,''

என்றார்.ஓராண்டுக்கு விலக்கு கோரும் சட்ட வரைவை தயார் செய்வதில், ராதாகிருஷ்ணனோடு, தமிழக அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை செயலர் கிருஷ்ணன், பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை செயலர் உமாநாத், தமிழக மருத்துவப் பணிகள் கழக இயக்குனர் செந்தில்குமார் ஆகியோரும் முக்கிய பங்காற்றினர்.


நாளை வெளியாகலாம்



சட்ட வரைவை ஏற்பதாக, உள்துறை அமைச்சகமும் தெரிவித்தது. இதன்பின், இந்த ஆவணங்கள், சட்டத்துறை, உயர் கல்வித் துறை, சுகாதாரத் துறை ஆகிய அமைச்சகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, உரிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்த மூன்று அமைச்சகங்களின் ஒப்புதல் கிடைத்ததும், மத்திய உள்துறை அமைச்சகம், ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு, சட்ட வரைவை அனுப்பி வைக்கும். இதன்பின், அந்த சட்ட வரைவு, தமிழக அரசுக்கு அனுப்பப்படும். இதையடுத்து, தமிழக கவர்னர் மூலமாக, 'நீட்' தேர்வுக்கு ஓராண்டு விலக்கு அளிக்கும் அவசர சட்டம் பற்றிய முடிவு நாளை வெளியாகலாம்.

No comments:

Post a Comment