இயக்கத்தின் இணையற்ற சோர்வறியா செயல்வீரர்களே......இயக்கத்தின் நாடி நரம்புகளாய்,ரத்த நாளங்களாய் விளங்கிக் கொண்டிருக்கும் உறுப்பினர்களே.....வீரஞ்செறிந்த போராட்ட வாழ்த்துக்கள்!நம் முற்றுகைப் போருக்கு இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே உள்ளன.தமிழகம் முழுவதும் போராட்டக்களம் கனன்று கொண்டிருக்கிறது.தமிழகத்தின் போர்க்குணமிக்க ஆசிரியர்கள் சென்னை மாநகர் நோக்கிப் பயணிக்கத் தயார் நிலையில்.ஆயிரங்கால் பூதமாய் ஆசிரியர் வர்க்கம் சென்னை மாநகரச் சாலைகளில் ஆர்ப்பரிக்கும் நாள்தான் பிப்ரவரி-03."மாங்குயில் கூவிடும் பூஞ்சோலை.....எமை மாட்ட நினைக்கும் சிறைச்சாலை"என்ற பாவேந்தனின் பாடல் வரிகளுக்கேற்ப சிறைக் கொட்டடிகளையும் பூஞ்சோலையாக நினைக்கும் செயல்வீரர்கள் கூட்டம் கல்லூரிச்சாலையில் உணர்ச்சிப் பிழம்பாய் சங்கமிக்கும்நாள் பிப்ரவரி-03.தமிழ்நாட்டு இடைநிலை ஆசியர்கள் இனி இழப்பதற்கு எதுவும் இல்லை.44 ஆண்டுகாலம் போராடி,வாதாடி,கண்ணீரும் செந்நீரும் சிந்திப் பெற்ற மத்திய ஊதியத்தை இழந்தோம்.எதிர் கால வாழ்வாதாரத்தை தாங்கிப்பிடிக்கும் தூணாய் விளங்கிக்கொண்டிருந்த ஓய்வூதியத்தை இழந்தோம்.அரசாணைக்கு முரணான தொடக்கக்கல்வி இயக்குநரின் பல்வேறு செயல்முறை ஆணைகளால் ஆண்டாண்டு காலமாகப் பெற்றுவந்த பல்வேறு அடிப்படை உரிமைகளை இழந்தோம்.மாநிலத்தில் லஞ்சம்,ஊழல்,அடாவடித்தனம் புரியும் கல்வித்துறை அலுவலர்களைச் சுட்டிக்காட்டினால் அவர்களுக்கு"சிறந்த கல்வியாளர்"என விருது கொடுக்கும் அவலத்தையும் கண்டோம்.தமிழ்நாட்டு ஆசிரியப் பேரினமே!இனி இழந்தது போதும்.இருப்பது இழப்பதற்கல்ல.....இழந்தது இயலாமல் அல்ல என்பதை நிரூபிப்போம்."தேடிச்சோறு நிதம் தின்று,பல சின்னஞ்சிறு கதைகள் பேசி, மனம் வாடித்துன்பம் மிக உழன்று,பிறர் வாழப் பல செயல்கள் செய்து,நரைகூடிக் கிழப்பருவம் எய்தி கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் வீழும் வேடிக்கை மனிதரைப்போல் வீழ்வேனென்று நினைத்தாயோ?"என்ற மகாகவியின் பாடல் வரிகளுக்கு வடிவமாய் முற்றுகைப்போரில் சங்கமிப்போம்!சாதனை படைப்போம்!(தோழமையுடன்,செ.பாலசந்தர்,பொதுச்செயலாளர்,தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி)
No comments:
Post a Comment