FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

15 July 2016

காலங்கள் மறக்காத பெயர் 'காமராஜர்!' : இன்று காமராஜர் பிறந்த நாள்

“படித்ததினால் அறிவு ​பெற்​றோர் ஆயிரம் உண்டு படிக்காத ​மேதைகளும் பாரினில் உண்டு...”

இந்த வரிகள், நிச்சயமாக, மறைந்த, முன்னாள் முதல்வர் காமராஜருக்கு பொருந்தும். பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வரலாற்றின் பக்கங்களில், காமராஜருக்கு, எப்போதுமே தனியிடம் உண்டு. பல்வேறு அணைகட்டுகள், தொழிற்சாலைகள், இவரின் பெயரை, இன்னும் நினைவூட்ட, இவர் மேற்கொண்ட செயல்பாடுகள் தான் காரணம்.


இவர் முதல்வராக இருந்த போது தான், ஊட்டியில் இந்துஸ்தான் போட்டோ பிலிம் தொழிற்சாலை, குந்தா நீர் மின் நிலையங்கள் தோற்றுவிக்கப்பட்டன. இவர், ஊட்டிக்கு வந்து போகும் போது, அவரோடு பழகும் வாய்ப்பை பெற்றிருந்த, ஊட்டி வக்கீல் ஹரிஹரன் கூறியதாவது:

காமராஜர், முதல்வராக இருந்த போது, ஊட்டிக்கு வரும் சமயங்களில், மாலை, 4:00 மணிக்கு மேல், ஊட்டி அரசு பூங்காவில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம்.

ஒரு நாள், ஊட்டி மார்க்கெட் கடைகளுக்கு சென்ற அவர், கடைகளில் வியாபாரிகளுடன் பேசி, கடையில் உள்ள பொருட்களை ஆராயத் துவங்கினார். மார்க்கெட் சாலையில், தெரு விளக்கு எரியாமல் இருப்பதை கண்ட அவர், மின்வாரிய அதிகாரியை அப்போதே வரவழைத்து, தெரு விளக்குகளை எரியச் செய்ய உத்தரவிட்டார்.

ஊட்டியில், இவர் ஆற்றிய களப்பணி தான், 'காங்., கோட்டை' என்ற மகுடத்தை, இன்று வரை இழக்காமல் இருக்கக் காரணம்.

இவ்வாறு, ஹரிஹரன் கூறினார்.



மதிய உணவு திட்டத்தின் பின்னணி!


ஒரு முறை, பொதுக்கூட்டத்துக்கு சென்றுக் கொண்டிருந்த காமராஜர், தன் தந்தையுடன், ஒரு சிறுவன், வயல்வெளியில் பணிபுரிந்துக் கொண்டிருந்தான். இதைக் கண்ட காமராஜர், வாகனத்தை நிறுத்தச் சொல்லி, சிறுவனின் தந்தையிடம் பேசினார்.

''பள்ளிக்கூடத்துல, இலவசக் கல்வி அறிவிச்ச பின்னால, ஏன், உன் மகனை, அங்க அனுப்பாம, வேலை செய்ய வைக்கிறாய்,'' என்றார். சிறுவனின் தந்தை, ''பள்ளிக்கூடத்துல, இலவசக் கல்வி இருக்குன்னு எனக்கும் தெரியும் சாமி. இங்க வேல செஞ்சா, நெலத்தோட முதலாளி, மதிய சாப்பாடு குடுத்துருவாரு. பள்ளிக்கூடத்துக்கு அனுப்புனா, மதிய சாப்பாடு கிடைக்காதே சாமி,'' என்றார்.

உடனடியாக, பொதுக்கூட்டத்தை ரத்து செய்து விட்டு, அலுவலகம் சென்ற காமராஜர், ''மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தினால், ஏராளமான குழந்தைகள், பள்ளிக்கு வருவார்கள். இதற்கு எவ்வளவு செலவாகும்,'' என்றார்.

அப்போதிருந்த நிதியமைச்சரோ, ''இதற்கு ஒரு கோடி ரூபாய் செலவாகும்,'' என்றார்.

''தமிழகம் முழுவதும், கல்வி மாநாடு நடத்த ஏற்பாடு செய்யுங்கள்; அங்கே நான் பங்கேற்று, இதற்கான நிதியை வசூலிக்கிறேன்,'' என்று சொல்லி, ஒரு கோடி ரூபாயை காமராஜர் வசூலித்து, கொண்டு வந்தது தான், இலவச மதிய உணவு திட்டம். 

-நமது நிருபர்

No comments:

Post a Comment