FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

17 June 2016

2017 ஜனவரி முதல் வழங்க ஏற்பாடு ஏடிஎம் வடிவில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு

தமிழகம் முழுவதும் ஜனவரி 2017 முதல் ஏடிஎம் வடிவில் ஸ்மார்ட் ரேஷன்கார்டு வழங்க உணவு வழங்கல் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக ரேசன் கடைகளுக்கு ஆதார் அட்டையை நேரடியாக கொண்டு சென்று ஸ்கேன் செய்ய உணவு வழங்கல்துறை ஏற்பாடு செய்துள்ளது. தமிழகம் முழுவதும் 1.90 கோடி ரேஷன்கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இந்த ரேஷன்கார்டுகளுக்கு தமிழகம் முழுவதும் 30 ஆயிரம் ரேஷன்கடைகள் மூலம் பொதுவிநியோக திட்டத்தின் கீழ் அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை ஆகிய பொருட்களும், சிறப்பு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு, பாமாயில் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தை பொறுத்தவரை கடைசியாக கடந்த 2005ம் ஆண்டு ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டது. இந்த ரேசன் கார்டுகளே 10 ஆண்டுகளுக்கும் மேலாக புழக்கத்தில் உள்ளன. இந்த கார்டுகள் கடந்த 2009ம் ஆண்டுடன் காலவதியாகிவிட்டது. அதன்பிறகு ஒவ்வொரு ஆண்டும் உள்தாள் ஒட்டியே ரேஷன் கார்டுகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.

முகவரி மாற்றம், புதிய குடும்ப உறுப்பினர்கள் சேர்க்கை, நீக்கல், பெயர் திருத்தம் ஆகியவை காரணமாக ரேசன்கார்டுகள் பழயை கந்தல் அட்டையை போல் உள்ளன. ஒவ்வொரு ஆண்டும் புதிய ரேசன் கார்டுகள் வழங்கப்படும் என எதிர்பார்த்த பொதுமக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. ரேசன் கார்டுகளை பொறுத்தவரை போலி ரேசன் கார்டுகள் புழக்கத்தில் உள்ளன. இதனால் பொது விநியோகத்திட்டத்திற்கு வழங்கும் மானியம் அரசுக்கு கூடுதல் சுமை ஏற்படுகிறது. எனவே போலி கார்டுகளை ஒழிக்கும் வகையில் ஆதார் எண்களை பதிவு செய்து ஏடிஎம் வடிவில் ஸ்மார்ட் கார்டு வழங்க உணவு வழங்கல்துறை திட்டமிட்டுள்ளது. ஆதார் எண் பதிவிற்கான பணி கடந்த 4 ஆண்டுகளாக நடந்து வந்தபோதிலும், இதுவரை முடியவில்லை. இதுவும் புதிய ரேசன் கார்டுகள் வழங்குவதற்கு காலதாமம் ஆவதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் 2017ம் ஆண்டு ஜனவரி முதல் ஸ்மார்ட் ரேஷன்கார்டு வழங்க உணவு வழங்கல்துறை முடிவு செய்துள்ளது. இதற்காக ரேசன் கடைகள் அனைத்திற்கும் பாயின்ட் ஆப் ஸ்கேல் என்ற புதிய இயந்திரம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் பெரம்பலூர், அரியலூர், கன்னியாகுமரி, தூத்துக்குடி உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு இந்த இயந்திரங்கள் முதல்கட்டமாக வழங்கப்பட்டுள்ளன. இந்த இயந்திரங்களில் ரேசன் அட்டையில் உள்ள அனைத்து விபரங்களும் பதிவு செய்யப்படும். அதன்பின்னர் ரேசன் கார்டு வைத்திருப்பவர்கள் குடும்ப தலைவர் மற்றும் உறுப்பினர்களின் ஆதார் அட்டையை ரேசன் கடைக்கு எடுத்து சென்று அந்த இயந்திரத்தின் மூலமே ஸ்கேன் செய்து பதிவேற்ற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் ஆதார் எண் குறிப்பிட்ட ரேசன் கார்டில் பதிவேற்றம் செய்யப்படும். இதன் மூலம் போலி கார்டுகள் அனைத்தும் களையெடுக்க முடியும் என அரசு நம்புகிறது. இதன் அடிப்படையிலேயே பொதுமக்களுக்கு ரேசன் பொருட்கள் மாதம்தோறும் வழங்கப்படும். ஒவ்வொரு ரேசன் கார்டுகளுக்கும் வழங்கப்படும் பொருட்கள் குறித்து அந்த ரேசன்கார்டு தாரரின் மொபைல் எண்ணுக்கு குறுஞ்செய்தி மூலம் தெரிவிக்கப்படும்.

இந்த இயந்திரங்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு ரேசன் கடைக்கும் ஒரு இயந்திரம் வழங்கப்படும். நெல்லை உள்ளிட்ட பிற மாவட்டங்களில் ஜூலை மாதத்தில் ஆதார் அட்டையை ஸ்கேன் செய்யும் பணி தொடங்கும் என உணவு வழங்கல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இந்த பணிகள் முழுமையாக முடிந்து 2017 ஜனவரி மாதத்தில் ஸ்மார்ட் ரேசன் கார்டுகள் வழங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment