FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

20 September 2015

நாளை முதல் கிராம செவிலியர்கள் காலவரையற்ற உண்ணாவிரதம்!

ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள 4,000 பணியிடங்களை நிரப்பப்கோரி கிராம சுகாதார செவிலியர்கள் செப்டம்பர் 21 முதல் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.


இதுகுறித்து, தமிழ்நாடு கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாநிலத் தலைவர் பாண்டியம்மாள் சென்னையில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:

தமிழகத்தில் கிராமப்புற சுகாதார நிலையங்கள், நகர்ப்புற சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் சுமார் 8,000 கிராம சுகாதார செவிலியர்கள் பணிபுரிகிறார்கள்.

இவர்களில் 20, 30 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்குக்கூட பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது.

துணை சுகாதார நிலையங்களில் 3,000 பணியிடங்கள், கிராமப்புற சுகாதார நிலையங்களில் 280, பள்ளிநலன் திட்டத்தில் 740 என சுமார் 4,000 காலிப் பணியிடங்கள் உள்ளன.

இதில் பள்ளிநலன் திட்டத்தில் உள்ள 740 இடங்களில் ஒப்பந்த அடிப்படையில் செவிலியர்களை நியமிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது. ஒப்பந்த அடிப்படையில் நியமிக்காமல் நிரந்தரமாக செவிலியர்களை நியமிக்க வேண்டும்.

மேலும், அங்கன்வாடி பணியாளர்களாகப் பணியாற்றி, பயிற்சி பெற்று கிராமப்புற சுகாதார செவிலியர்களாகப் பதவி உயர்வு பெற்றவர்களுக்கு பணிவரன்முறை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளைப் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகிறோம்.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி செப்டம்பர் 21-ஆம் தேதி (திங்கள்கிழமை) சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். இதில் சுமார் 3,000 செவிலியர்கள் பங்கேற்க உள்ளனர் என்று அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment