FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

19 January 2018

நாள்கள், நாட்கள் -எது சரி?

நாள்கள், நாட்கள் - எது சரி ?

இந்த ஐயம் எல்லாரையும் பாடாய்ப் படுத்துகிறது. இதுவரை நாட்கள், ஆட்கள் என்று எழுதியபோது நமக்கு எந்த ஐயமும் ஏற்படவில்லை. ‘ஆட்கள் வேலை செய்கிறார்கள்’ என்பது புகழ்பெற்ற அறிவுப்புப் பலகை. ‘அந்த 7 நாட்கள்’ என்பது திரைப்படத் தலைப்பு. இப்போது நாட்கள் என்பது சரியா, நாள்கள் என்பது சரியா என்னும் பலத்த ஐயம் தோன்றிவிட்டது. நான் நாள்கள் என்றுதான் எழுதுகிறேன். ஆனந்த விகடன் ஆசிரியர் குழாத்தோடு பேசியபோது அவர்களும் நாள்கள் என்றே பயன்படுத்துவதாகச் சொன்னார்கள். ஆக, இப்போது நாள்கள் என்ற பயன்பாடு மிகுந்துவிட்டமையால் இந்த ஐயமும் பரவலாகிவிட்டது. 


முதலில் இந்த வழக்கை முழுமையாக விளங்கிக்கொள்வோம். 



கள் விகுதி என்பது தனிச்சொல் இல்லை. கிறு கின்று போல, அன் அள் அர் போல, அத்து அற்று போல, ஐ ஆல் கு போல - கள் என்னும் விகுதியும் சொல்லுக்குள் ஓர் உறுப்பாகப் பயில்வது. சொல்லுருபு. பன்மையை உணர்த்தத் தோன்றும் விகுதி.  அதனால் இது சொல்லுக்குள் முன்மொழிக்கேற்ப புணர்ந்து நிற்குமா, இயல்பாய் நிற்குமா என்பது முதற்கண் விளங்கிக்கொள்ளப்படவேண்டியது. 


ல் என்ற மெய்யில் முடியும் சொற்கள், ள் என்ற மெய்யில் முடியும் சொற்கள் - என இரண்டு வகைமைகளை எடுத்துக்கொள்வோம். இவை இரண்டுக்கும் ஏறத்தாழ ஒரே வகையான புணர்ச்சித் தன்மைகள் அமையும்.  

------


நம் எளிமைக்காக இங்கே பெயர்ச்சொற்களை எடுத்துக்கொள்வோம். 


ல் என்ற மெய்யில் முடியும் சொற்கள் என்னென்ன ? 

பல், சொல், கால், வால், விரல், குழல், பகல், நிழல், காதல், பாடல்.  


ள் என்ற மெய்யில் முடியும் சொற்கள் என்னென்ன ? 

முள், புள், திரள், குறள், பொருள், மருள், கோள், தேள், நாள், ஆள்.

------



ல் மெய்யில் முடியும் சொற்களும் கள் விகுதியும் 

*


ல் என்ற மெய்யில் முடியும் பெயர்ச்சொல்லின் பன்மையை உணர்த்த கள் விகுதி சேர்கிறது எனக்கொள்வோம். என்னாகிறது ?


பல் = பற்கள்.  

சொல் = சொற்கள்.  


தனிக்குறிலை அடுத்து ல் தோன்றும் சொற்களில் கள் விகுதிக்குப் புணர்ச்சி நேர்கிறது. அங்கே ல், ற் ஆகி விடுகிறது. 


எடுத்துக்காட்டுகளில் அடுத்தே உள்ள சொற்களை எவ்வாறு எழுதுகிறோம் ? புணர்த்தி எழுதுகிறோமா ?  


கால் = கால்கள் (காற்கள் என்று எழுதுவதில்லை)

வால் = வால்கள் (வாற்கள் என்று எழுதுவதில்லை)


ஆக, தனி நெடிலை அடுத்து ல் தோன்றும் சொற்களில் ‘கள்’ விகுதியைப் புணர்த்தி எழுதுவதில்லை. 


குறிலிணை எழுத்துகளை அடுத்து ல் மெய் தோன்றும்போதும், பிறவகைக் கலப்பு எழுத்தமைவை அடுத்து ல் மெய் தோன்றும்போதும் கள் விகுதிக்குப் புணர்த்தாமல்தான் எழுதுகிறோம். 


விரல்கள் = விரல்கள்(விரற்கள் என்று எழுதுவதில்லை)

குழல் = குழல்கள் (குழற்கள் என்று எழுதுவதில்லை)

பகல் = பகல்கள் (பகற்கள் என்று எழுதுவதில்லை)

நிழல்கள் = (நிழற்கள் என்று எழுதுவதில்லை)

காதல் = காதல்கள் (காதற்கள் என்று எழுதுவதில்லை)

பாடல் = பாடல்கள் (பாடற்கள் என்று எழுதுவதில்லை )


*

ள் மெய்யில் முடியும் சொற்களும் கள் விகுதியும் 

*


ள் என்ற மெய்யில் முடியும் பெயர்ச்சொல்லின் பன்மையை உணர்த்த கள் விகுதி சேர்கிறது எனக்கொள்வோம். என்னாகிறது ?


முள் = முட்கள் 

புள் = புட்கள் 


தனிக்குறிலை அடுத்து ள் தோன்றும் சொற்களில் கள் விகுதிக்குப் புணர்ச்சி நேர்கிறது. அங்கே ள், ட் ஆகி விடுகிறது. 


குறிலிணை எழுத்துகளை அடுத்து ள் வந்தாலோ கள் விகுதிக்குப் பெரும்பாலும் புணர்த்துவதில்லை. 


திரள் = திரள்கள் (திரட்கள் என்று எழுதுவதில்லை)

குறள் = குறள்கள் (குறட்கள் என்று எழுதுவதில்லை )


தனி நெடிலை அடுத்து ள் தோன்றும் இரண்டெழுத்துச் சொற்களில் கள் விகுதிப் புணர்ச்சி நேருமா ? கோள், தேள், தோள், நாள், ஆள். 


கோள் = கோள்கள் (கோட்கள் என்று எழுதுவதில்லை)

தேள் = தேள்கள் (தேட்கள் என்று எழுதுவதில்லை)

தோள் = தோள்கள் (தோட்கள் என்று எழுதுவதில்லை)

நாள் = நாள்கள் (நாட்கள் என்று எழுதுவது எப்படி ?) :)

ஆள் = ஆள்கள் (ஆட்கள் என்று எழுதுவது எப்படி ?) :)


நாட்கள், ஆட்கள், பொருட்கள் என்னும் சில நிலைமைகளில் மட்டும் புணர்த்தியும் கோள்கள், தேள்கள், தோள்கள், குறள்கள் என்று அதே விதியுடைய இன்னோரிடத்தில் புணர்த்தாமலும் எழுதுகிறோம். 


கால்கள், வால்கள், கோல்கள், பகல்கள், நிழல்கள் என்று அங்கேயும் இயல்பாக எழுதுகிறோம். 


ஆக நம்மிடம்தான் ஏதோ தவறிருக்கிறது.  


நாட்கள் ஆட்கள் என்று எழுதினால் “மழை பெய்ததும் தேட்கள் வந்தன” என்று எழுதவேண்டும். “ஒன்பது கோட்களும் உச்சம் பெற்ற ஒருவன்” என்று எழுதவேண்டும். “அவளுக்கு மூங்கில்போன்ற தோட்கள்” என்று எழுதவேண்டும். “இரண்டு காற்களும் நன்றாக இருந்தால்தான் ஓடமுடியும்” என்று எழுதவேண்டும். “குதிரைகளுக்கு அழகிய வாற்கள்” என்று எழுத வேண்டும். 


பொருட்கள் என்று எழுதினால் இருட்கள் என்று எழுதவேண்டும். ”திருக்குறட்களை நன்கு பயில வேண்டும்” என்று எழுத வேண்டும்.    


இப்போது நமக்கு என்ன விளங்குகிறது ? ஓரிடத்தில் கள் விகுதிக்குப் புணர்த்தியும் (ஆட்கள், நாட்கள், பொருட்கள்) அதே நிலைமையுடைய பிறவிடங்களில் கள் விகுதிக்குப் புணர்த்தாமலும் எழுதுகிறோம். (கால்கள், வால்கள், விரல்கள், குறள்கள்). 


நம்மிடம்தான் இடத்திற்கேற்ப ஒரு நிலைப்பாடு இருக்கிறது. புணர்ச்சி குறித்து நாம் ஒரு கொள்கைக்குள் நிற்கவில்லை. இங்கேதான் நாம் ஒரு முடிவெடுக்க வேண்டும். அதில் நிற்க வேண்டும்.  


***


நாம் என்ன செய்ய வேண்டும் ? இந்த வழக்குக்குத் தீர்ப்பு என்ன ? இதுதான் :)


1). தனிக்குறிலை அடுத்து ல்/ள் வந்தால் கள் விகுதிக்கு ற்/ட் என்ற புணர்ச்சி நேரும் (பற்கள், சொற்கள், முட்கள், புட்கள்)


2). குறிலிணையை அடுத்து ல்/ள் வந்தால் கள் விகுதிக்குப் புணர்த்தல் தேவையில்லை. (விரல்கள், நிழல்கள், குறள்கள், பொருள்கள்). 


பொருட்கள் என்று புணர்த்தினால் எல்லாச் சொற்களுக்கும் அவ்வாறே புணர்த்தி எழுத வேண்டும். அது இயல்பாய் இல்லை. எனவே அதைக் கைவிடுக.  


3). தனி நெடிலை அடுத்து ல்/ள் வந்தால் கள் விகுதிக்குப் புணர்த்தல் தேவையில்லை (கால்கள், வால்கள், கோள்கள், நாள்கள், ஆள்கள்). 


4). நாட்கள், ஆட்கள் என்று புணர்த்தி எழுதினால் எல்லாச் சொற்களுக்கும் அவ்வாறே புணர்த்தி எழுத வேண்டும். அது இயல்பாய் இல்லை. 


5). நாள்கள், ஆள்கள், பொருள்கள் என்பது ஒரு சொல்லைப் புணர்ச்சியிலிருந்து பிரித்து எழுதுவதாகத்தான் கருதப்பட வேண்டும். மருணீக்கியார் என்பதைப் பிரித்து எழுதுகையில் மருள் நீக்கியார் என்று எழுதுகிறோம். இது குற்றமில்லையே. ‘கடவுட்டன்மை’ என்றெல்லாம் புணர்த்தி எழுதாமல் ‘கடவுள் தன்மை’ என்றே எழுதுகிறோம். ஆக, ஒன்றைப் புணர்த்தாமல் எழுதினால், எளிமை கருதி அதைப் பிரித்து எழுதியதாகவே எடுத்துக்கொள்ளலாம். அதனால், நாள்கள் ஆள்கள் பொருள்கள் என்றெழுதுவது அதைப்போல் பிரித்தெழுதிய நிலைமையே. ஒருபோதும் குற்றமாகாது. 


ஆக, நாட்கள் ஆட்கள் பொருட்கள் என்றெழுதுவதைவிட எல்லா நிலைமைகளோடும் ஒரே கொள்கையுடையவராய் நாள்கள், ஆள்கள், பொருள்கள் என்றே எழுதுக !

No comments:

Post a Comment