FLASH / SPECIAL NEWS

#### TEACHERS NEWS TN ####

SCROLL

TEACHERS NEWS TN

21 November 2016

மின்னணு முறைக்கு மாறுகிறது அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு!

         தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்காக பராமரிக்கப்பட்டு வரும் நீண்டகாலத்தய பணிப் பதிவேடு முறைக்கு விடை கொடுத்து புதிய இ-மின்னணு பதிவேற்றத்துக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


          தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அனைவரும் பணிக்கு சேர்ந்தது முதல் அவர்கள் ஓய்வு பெறும் வரையில் அவர்கள் பெறும் ஊதியம், நிலுவைத் தொகை, ஊதிய உயர்வு, ஊக்க ஊதிய உயர்வு, பணி வரன்முறை, பணி நிரந்தரம், பதவி உயர்வு, பணிக் காலத்தில் பெற்ற தண்டனைகள், அயல் பணி உள்ளிட்ட விவரங்கள் அனைத்தும் பணிப் பதிவேட்டில் (சர்வீஸ் ரெஜிஸ்டர்) பதிவேற்றம் செய்யப்படும். ஒவ்வோர் அரசு ஊழியருக்கும் தனித் தனியாகப் பராமரிக்கப்படும் இந்தப் பணிப் பதிவேட்டை, தாங்கள் பணிபுரியும் துறையின் அதிகாரி கவனித்து வருவார்.
மேலும், பணிப் பதிவேட்டில் ஊழியரின் குடும்ப விவரம், கல்வித் தகுதிகள், உடல் தகுதிகள், குடும்ப நல நிதி, வருங்கால வைப்பு நிதி உள்ளிட்டவையும் இடம் பெற்றிருக்கும். அரசு ஊழியரின் பணியிடமாறுதலின் போது, இந்தப் பணிப் பதிவேட்டில் பதிவு செய்து, ஊதியச் சான்றிதழுடன் உரிய அலுவலகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.
இந்தப் பணிப் பதிவேட்டில் உள்ள பதிவுகள் சரிபார்க்கப்பட்டு, அதற்கு ஒப்புதலாக ஒவ்வோர் அரசு ஊழியரும் ஆண்டுக்கு ஒரு முறை கையெழுத்திட வேண்டும்.
புத்தக வடிவிலான பதிவேடு: இந்தப் பணிப் பதிவேடுகள் ஆரம்ப காலத்திலிருந்தே தாள்கள் வடிவில் பெறப்பட்டு, பின்னர் புத்தக வடிவில் மாற்றப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன.
பணிப் பதிவேட்டின் பக்கங்கள் நிறைவு பெற்றதும், இரண்டாவது பணிப் பதிவேடு பதிவு செய்யப்படும்.
ஆண்டுக்கணக்கில் பராமரிக்கப்படும் இந்தப் பணிப் பதிவேடுகள் கிழிந்துவிடும் நிலையும் உள்ளது. அவற்றை பைண்டிங் செய்பவர்களிடம் கொடுத்து தைத்துவைத்து பயன்படுத்துபவர்களும் உள்ளனர்.
மின்னணு பணிப் பதிவேடு: இதுபோன்ற பிரச்னைகளுக்கு விடை கொடுக்கும் வகையில், அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகளைக் கணினிமயமாக்கும் நடவடிக்கையை தமிழக அரசு தொடங்கியுள்ளது. மின்னணு பணிப் பதிவேடு (இ-எஸ்ஆர்) திட்டத்தில், தற்போதுள்ள காகிதத்தால் ஆன புத்தக வடிவ பணிப் பதிவேடுகளின் தகவல்களை அப்படியே மின்னணு முறையில் கணினியில் பதிவேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகக் கருவூலத் துறையின் உத்தரவின் பேரில், மாவட்ட கருவூல அலுவலர்கள் மூலம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பணிப் பதிவேடுகளை மின்னணு முறையில் பதிவேற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை கடந்த சில நாள்களுக்கு முன்பு தொடங்கியுள்ளனர்.
முதல் கட்டமாக, மாவட்டங்கள்தோறும் அனைத்துத் துறை அலுவலர்களையும் அழைத்து, கருவூல அதிகாரிகள் இதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள ஆலோசனை வழங்கியுள்ளனர். ஒவ்வொரு துறையினரும் பணிப் பதிவேடு தகவல்களைச் சரிபார்த்து, அதை நிறைவாகத் தொகுத்து அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்டக் கருவூல அலுவலர் இளங்கோ பிரபு கூறியதாவது:
புத்தக வடிவில் பராமரிக்கப்பட்டு வரும் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகளைக் கணினி முறையில் தொகுத்து நவீனப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
கருவூல ஆணையரின் உத்தரவின் பேரில், இதற்காக பணிப் பதிவேடுகள் குறித்த தகவல்களைச் சரிபார்த்துத் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அனைத்துத் துறை அலுவலர்களிடமும் அறிவுறுத்தியுள்ளோம்.
விரைவில் இந்தத் தகவல்களைப் பதிவேற்றம் செய்ய பயிற்சி பெற்ற குழுவினர் மாவட்டத்துக்கு வர உள்ளனர். இவர்கள், துறை வாரியாக தற்போதுள்ள பணிப் பதிவேடுகளின் விவரங்களைக் கணினியில் பதிவேற்றம் செய்வர்.
அதன்பிறகு, அந்தந்த துறை அலுவலர்கள், கணினி வாயிலாக பணிப் பதிவேடு தகவல்களைப் பதியவும், பராமரிக்கவும் முடியும்.
தேவைப்படும் போது அந்தத் துறையின் தலைமைக்கும், அரசுத் துறை ஆய்வுக்காகவும் பதிவேடு குறித்த தகவல்களை இணைய வழியில் அனுப்பி வைக்கலாம். இதன்மூலம், புத்தக முறை பணிப் பதிவேடுக்கு விடை கொடுத்து, எளிதாகப் பதிவு செய்தும், பார்த்தும் பராமரிக்க முடியும். அதற்கான நடவடிக்கையை அரசு விரைந்து மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.
பணிகள் எளிதாகும்: இதுகுறித்து அரசு அலுவலர்கள் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள சுமார் 13.5 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கும், விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சுமார் 35 ஆயிரம் ஊழியர்களுக்கும் பணிப் பதிவேடு புத்தகமாகவே பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்த நவீனத் திட்டம் நடைமுறைக்கு வருவதன் மூலம் எளிதாகத் தகவல்களைப் பதிவு செய்யவும், பராமரிக்கவும் முடியும். காகித முறையால் பதிவேடு சேதமாவது தடுக்கப்பட்டு, தகவல்கள் நீண்ட காலம் பாதுகாப்புடன் இருக்கும் என்றனர் அவர்கள்

No comments:

Post a Comment